தீபாவளி திருநாளைக் கொண்டாடும் வகையில், ஆஸ்ட்ரோ நிறுவனம் Sony VIZHA (சோனி விழா) என்ற புதிய பிரீமியம் தமிழ் பொழுதுபோக்கு அலைவரிசையை இன்றிரவு 10.30 மணிக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆஸ்ட்ரோவின் 220-ஆவது அலைவரிசையில் ஒளிபரப்பாகும் இதில், பிரபலத் திரைப்படங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், புதிய தொடர்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

தமிழில் ‘விழா’ என்று பொருள்படும் VIZHA என்ற பெயருக்கு ஏற்ப, தமிழ் மக்களின் பண்பாடு, இசை, கதைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் இடம் பெறும். இந்த அலைவரிசை தீபாவளியுடன் நின்றுவிடாமல், ஆண்டு முழுவதும் புதிய நிகழ்ச்சிகளை வழங்கும் என்று ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வர்த்தகப் பிரிவின் உள்ளடக்கத் தலைவர் ஜெகன் மாணிக்கம் வாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், “Ondrinaindhu Kondaduvom” — (ஒன்றிணைந்து கொண்டாடுவோம்) என்ற கருப்பொருளில், பல இன மக்களின் ஒற்றுமையையும் ஆஸ்ட்ரோ முன்னிறுத்துகிறது என்று ஜெகன் மாணிக்கம் குறிப்பிட்டார்.

இதனிடையே கடந்த சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஆப்-குளோஸ் & பெர்சனல்: சைந்தவி இசை நிகழ்ச்சி, பாடல்களுடன் ஆடல், உற்சாகம், கலகலப்பு என ரசிகர்களுக்கு மறக்க முடியாத இசை மாலையாக அமைந்தது.

சைந்தவி தனது இனிய குரலால் ரசிகர்களைக் கவர்ந்ததுடன், புகழ்பெற்ற பின்னணிப் பாடகிகளின் பாடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் சிறப்புப் பாடல்களும் இடம்பெற்றன. சைந்தவியுடன் சித்தார்த் இணைந்து பாடிய தருணங்களும் நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன. இசை, நடனம், கலைஞர்களின் உற்சாகமான பங்கேற்பு என அரங்கமே கொண்டாட்டச் சூழலில் திளைத்தது.








