Sep 25, 2026
Thisaigal NewsYouTube
மலேசியத் திரைப்படத் துறையின் முன்னோடி டான் ஸ்ரீ எல். கிருஷ்ணன் காலமானார்
சினிமா

மலேசியத் திரைப்படத் துறையின் முன்னோடி டான் ஸ்ரீ எல். கிருஷ்ணன் காலமானார்

Share:

மலேசியத் திரைப்படத் துறையின் முன்னோடியும், 2016ஆம் ஆண்டின் மெர்டேக்கா விருது பெற்றவருமான டான் ஸ்ரீ எல். கிருஷ்ணன், தனது 104ஆவது வயதில் தாய்லாந்தின் சியாங் மாயில் காலமானார். அவரது மறைவை பினாஸ் (FINAS) தலைமைச் செயலதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

மலாய் திரைப்படத்தின் பொற்கால வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய எல். கிருஷ்ணன், ஷா பிரதர்ஸ் மற்றும் கெத்தே கிரிஸ் நிறுவனங்களில் முன்னணி இயக்குநராகப் பணியாற்றியதுடன், 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

1950ஆம் ஆண்டு அவர் இயக்கிய பக்தி திரைப்படத்தில், பின்னாளில் மலாய் திரையுலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த டான் ஸ்ரீ பி. ரம்லிக்கு முக்கிய கதாபாத்திரத்தை வழங்கி, அவரது திரையுலகப் பயணத்தில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் எல். கிருஷ்ணன்.

பின்னர் சொந்தமாக காயா ஃபில்ம்ஸ் (Gaya Films) நிறுவனத்தை உருவாக்கி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்த அவர், மலேசியத் திரைப்படத் துறையின் நவீன வளர்ச்சிக்கும் வலுவான அடித்தளத்தை அமைத்தார்.

1970 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தயாரித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தின் கோலாலம்பூர் மற்றும் பினாங்கு பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு வசதிகளை ஷா நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்தவரும் எல். கிருஷ்ணனே.

மலாய் மற்றும் மலேசியத் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கிய டான் ஸ்ரீ எல். கிருஷ்ணனின் மறைவு, ஒரு வரலாற்றுச் சகாப்தத்தின் முடிவாக அமைந்துள்ளது.

Related News

மலேசியத் திரைப்படத் துறையின் முன்னோடி டான் ஸ்ரீ எல். கிரு... | Thisaigal News