மத்திய தரைக்கடல் திரைப்பட விழாவின் இறுதி நிகழ்வாக ‘கோல்டன் பீ விருதுகள் 2026’ மால்தா நாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. ஜூன் 21 முதல் 28 வரை நடைபெற்ற இந்தத் திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், பல்வேறு சர்வதேசத் திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விழாவில், பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் சோடர்பெர்க்கின் 'தி கிறிஸ்டோபர்ஸ்' திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், அதன் திரைக்கதைக்காக எட் சாலமன் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வென்றனர். மேலும், 'மொண்ட்டி பைத்தான்' திரைப்பட புகழ் மூத்த நடிகர் ஜான் க்ளீஸ் அவர்களுக்கு 'கோல்டன் பீ ஐகான்'விருது வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் நட்சத்திரத்திற்கான விருதை நடிகை டோவ் கேமரூன் தட்டிச் சென்றார்.
புகழ்பெற்ற மால்தா ஃபிலிம் ஸ்டுடியோஸில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விருது வழங்கும் விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் ஜாக் வைட்ஹால் தொகுத்து வழங்கினார். மேலும், பிரபல பாடகி லியோனா லூயிஸ் மற்றும் மால்தா நாட்டின் ஓபரா பாடகர் ஜோசப் காலேஜா ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் விழாவை மேலும் மிளிரச் செய்தன. இந்தத் திரைப்பட விழாவின் மூலம் திரட்டப்பட்ட டிக்கெட் வருவாய் அனைத்தும் மால்தாவின் உள்ளூர் புற்றுநோய் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.








