மலேசியாவில் உள்ள பத்துகேவ்ஸ் ஷென்கா கன்வென்சன் செண்டரில் நடைபெற்ற 'சொடக்கு' திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவர்களுடன் இயக்குநர் லிங்குசாமி, வசனகர்த்தா சரண் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகளும் மற்றும் சிறப்பு விருந்தினர்களாகப் பல டத்தோக்களும் இம்மாபெரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியாவின் ஜூபிலி பிலிம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்குப் பிரபல இயக்குநர் சரண் வசனம் எழுதியுள்ளார். இயக்குநர் காமராஜ் மனோன்மணி கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இப்படம் முழுக்க முழுக்க மலேசியாவிலேயே படமாக்கப்பட்டுள்ளதால், இப்படம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரையனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நட்டி மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படத்தில் கயல் ஆனந்தி, ரக்ஷிதா மற்றும் அபிஷேக் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாழ்க்கையில் நாம் போடும் ஒரு சொடக்கு நேரத்துக்குள் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களையும், அதனால் ஏற்படும் குழப்பங்களையும் சுவாரசியமான அதிரடி திரில்லர் கதைக்களமாக இப்படம் கொண்டுவருகிறது.









