Jul 19, 2026
Thisaigal NewsYouTube
தனுஷின் 'D55': சாய் அபயங்கரின் அதிரடி இசைக்கோர்ப்பு - வைரலாகும் புதிய புகைப்படம்!
சினிமா

தனுஷின் 'D55': சாய் அபயங்கரின் அதிரடி இசைக்கோர்ப்பு - வைரலாகும் புதிய புகைப்படம்!

Share:

திரைையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனுஷின் 55-வது திரைப்படம் குறித்த உற்சாகமான தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான இசையமைப்புப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

நடிகர் தனுஷுடன் இருக்கும் புதிய கருப்பு-வெள்ளை புகைப்படம் ஒன்றைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சாய் அபயங்கர், "#D55" என்ற ஹேஷ்டேக்குடன் நெருப்புப் பொறியின் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தனுஷின் ரசிகர்களுக்கு ஒரு அதிரடியான இசை விருந்து தயாராகி வருவதை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். 'அமரன்' திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில், தனுஷுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இசைக்கோர்ப்பு குறித்துப் பேசிய சாய் அபயங்கர், இதில் தனுஷின் நடனத் திறமைக்கு ஏற்ற அதிரடிப் பாடல்களும், மனதைக் கவரும் காதல் பாடல்களும் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி மீண்டும் தமிழ்த் திரையுலகிற்குத் திரும்புவதும், 'மாரி 2' படத்திற்குப் பிறகு தனுஷ் - சாய் பல்லவி கூட்டணி இணைவதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இப்படம் தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' மற்றும் 'ஆர்டேக் ஸ்டுடியோஸ்' இணைந்து தயாரிக்கின்றன.

Related News