நான்கு முறை சிகாமட் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடீன் ஹரூன், வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனலின் கோட்டையான லிங்கி தொகுதியில் போட்டியிடக்கூடும் எனப் பேசப்படும் வேளையில், இது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
2018 முதல் மந்திரி பெசாராக இருக்கும் அமினுடீன், பிகேஆர் கட்சியின் வேட்பாளர்கள் குறித்து அக்கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பே அறிவிப்பார் என்றார்.
"எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நான் சிகாமட் தொகுதியிலேயே தொடரலாம் அல்லது லாபு தொகுதி போன்ற வேறு எங்கும் தலைவர் என்னை அனுப்பலாம்" என்று அவர் கூறினார்.
போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் அமினுடீன், லிங்கி தொகுதியில் களம் இறக்கப்பட்டால் அங்கே பக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. லிங்கி தொகுதி எப்போதும் பாரிசான் நேஷனலின் பலமான கோட்டையாக இருந்து வருகிறது.
இத்தேர்தலில் பக்காத்தான் கூட்டணி மொத்தம் உள்ள 36 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதில் பிகேஆர் 16 இடங்களிலும், ஜசெக 11 இடங்களிலும், அமானா 9 இடங்களிலும் போட்டியிடுகின்றன.








