பேரா மாநிலத்தில் பன்றிப் பண்ணைகளை நவீன தொழில்நுட்ப முறைக்கு மாற்றும் திட்டங்கள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் தெரிவித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், பன்றிப் பண்ணைகள் சுத்தமான முறையிலும் சுகாதார விதிமுறைகளின்படியும் இயங்குவதை நோக்கமாகக் கொண்டது.
கடந்த 2023-இல் 125 பண்ணைகளுடன் மலேசியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான பன்றிப் பண்ணைகளைக் கொண்ட மாநிலமாக பேரா திகழ்ந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 82 ஆகக் குறைந்துள்ள போதிலும், மாநில அரசு எந்தவொரு பண்ணையையும் கட்டாயப்படுத்தி மூடவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
நோய்த்தாக்கம், நிதி நெருக்கடிகள் மற்றும் நவீன பண்ணை முறைக்கு மாற இயலாமை போன்ற காரணங்களால் சில பண்ணை உரிமையாளர்கள் தாங்களாகவே தங்களின் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டனர். ஒரு பண்ணையை நவீனமயமாக்குவதற்கு குறைந்தபட்சம் 18 லட்சம் ரிங்கிட் முதல் அதிகபட்சமாக 10 கோடி ரிங்கிட் வரை முதலீட்டுச் செலவு ஏற்பட்டுள்ளது.
தற்போது செயல்பாட்டில் உள்ள 82 பண்ணைகளில், 28 பண்ணைகள் 100 விழுக்காடு முழுமையாக நவீனமயமாக்கப்பட்டுள்ளன. மேலும் 6 பண்ணைகள் 90 விழுக்காடும், 8 பண்ணைகள் 80 விழுக்காடும், 2 பண்ணைகள் 70 விழுக்காடும் தங்களின் பணிகளை நிறைவு செய்துள்ளன.
இன்னும் 13 பண்ணைகள் நவீனமயமாக்கல் பணிகளைத் தொடங்காத நிலையில், அவற்றில் சில திட்ட அனுமதிக்காக விண்ணப்பித்து வருகின்றன. சம்பந்தப்பட்ட மாவட்ட நில அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி மன்றங்கள் அவற்றின் விண்ணப்பங்களை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டத்தோ சிவநேசன் கூறினார்.














