அண்மையில், சிலாங்கூர் கூட்டரசு பிரதேச இலங்கைத் தமிழ் கலாவிருத்தி சங்கத்தின் கட்டட மறு சீரமைப்புப் பணிகளுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி அம்பாங்கில் நடைபெற்றது.
கடந்த 1939 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தச் சங்கத்தின் கட்டடம் தற்கால சூழலுக்கு ஏற்பச் செயல்படவும் அதிகமானோருக்குச் சேவையாற்றவும் இந்த சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படுவதாக அதன் தலைவர் டத்தோ கே தம்பிராஜா தெரிவித்தார்.
தங்களின் ஆண்டு நடவடிக்கைகளாக பொங்கள் விழா, சித்திரைப் புத்தாண்டு, நவராத்திரி, விஜயதசமி, நடன வகுப்புகள், நாதஸ்வரம், தவில் வகுப்புகள் ஆகியவற்றை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இச்சங்கத்தின் கட்டடத்தில் சில வசதிகளை மேம்படுத்தி அதிகமான மாணவர்கள் கலந்து கொள்ளவும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மலேசிய ஶ்ரீ லங்கா அமைப்புகளின் சம்மேளனம் ஃபோம்சோவின் தலைவர் டத்தோ எ. யோகேஸ்வரன் இச்சங்கத்திற்கு தமது பங்களிப்பாக 10,000 வெள்ளியை நன்கொடையாக அளித்தார்.
இலங்கைத் தமிழர்களின் கலை, கலாச்சாரம் தொடர்ந்து காக்கப்பட்டு அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்காக ஒவ்வொரு இலங்கைத் தமிழர் குடும்பத்தில் இருந்தும் அதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனவும் டத்தோ யோகேஸ்வரம் தமதுரையில் குறிப்பிட்டார்.
ஆடல், பாடல் என இன்னிசை விருந்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி வருகையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அந்நிகழ்ச்சியில், சிலாங்கூர் கூட்டரசு பிரதேச இலங்கைத் தமிழ் கலாவிருத்தி சங்கத்தில் நீண்டகாலம் சேவையாற்றி வரும் எஸ்.லோகராஜா, கே.சிவானந்தம், விக்னேஷ்வரன் கந்தையா, விஜயகுமாரி பூபாலன், ஏ பூபாலன். பி.கிருஷ்ணமூர்த்தி ஆகிய அறுவருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.








