உலகில் மூலப்பொருட்களின் மிகப்பெரிய மொத்த வியாபார வர்த்தக மையமான சீனாவை சேர்ந்த யிவு சீனா கொம்மொடித்திஸ் சிட்டி, மலேசியாவில் தனது முதலாவது கண்காட்சி அறையை திறந்துள்ளது.
மலேசியாவின் மிகப்பெரிய மொத்த வியாபாரத் தளமான ஜி.எம் கிள்ளான் கில் அது இந்த கண்காட்சி அறையை திறந்துள்ளது.
யிவு நிறுவனமானது, சீனாவில் இருந்து கடல் கடந்து 26 மிகப்பெரிய தரமான விநியோகஸ்தர்களை மலேசியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் அவர்களுடன் உள்நாட்டு வணிகர்கள் இணைந்து புதிய வணிகங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளை அது ஏற்படுத்தியுள்ளதாக ஜி.எம் கிள்ளான் கில் நிர்வாக இயக்குநர் டத்தோ லிம் செங் கோக் தெரிவித்தார்.
நேற்று காலையில் கிள்ளான் பண்டார் பொட்டானிக் கெப்பிட்டலில் உள்ள ஜிஎம் கிள்ளான் மொத்த வியாபாரத் தளத்தில் புலோக் பி, ஆறாவது மாடியில் யிவு கண்காட்சி அறையை திறந்து வைக்கும் நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ லிம் செங் கோக் இதனை தெரிவித்தார்.
யிவு நிறுவனம் சீனாவில் இருந்து மிகப் பிரபலமான விநியோகஸ்தர்களை வரவழைத்திருக்கிறது. அவர்கள் பல்வேறு வகையான உயர் தரத்திலான பொருட்களைக் கண்காட்சியில் வைத்துள்ளனர். இதன் மூலம் மலேசிய வணிகர்களைத் தங்களின் வர்த்தகப் பங்காளிகளை கவர்வதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஜிஎம் கிள்ளான் கில் இந்த கண்காட்சி திறக்கப்பட்டது மூலம் மலேசியாவில் உள்ள வர்த்தகர்கள் அல்லது தொழில் முனைவர்கள் தாங்கள் விரும்பும் பொருட்களை வாங்குவதற்கு ஆள்பலம், பணம் மற்றும் நேரத்தை செலவிட்டு சீனா, யிவு க்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. மாறாக, உயர் தரத்திலான அனைத்துப் பொருட்களும் ஜிஎம் கிள்ளானில் உள்ள யிவு விநியோகத்தர்களிடமே நேரடியாக வாங்குவதற்குரிய வாய்ப்பை இந்த கண்காட்சி ஏற்படுத்தி தந்துள்ளதாக டத்தோ லிம் செங் கோக் குறிப்பிட்டார்.
இந்த கண்காட்சியில் சீனமொழி தெரியாதவர்களுக்கு விளக்கம் அளிக்க பிரத்தியேக ஏற்பாடுகளையும் ஜிஎம் கிள்ளான் செய்து தந்துள்ளது. இந்நிகழ்வில் பல மலேசியத் தொழில் முனைவர்கள் சீனத் தொழில் முனைவர்களுடன் பல ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


