வரும் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஈப்போவில் உள்ள கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தான திருக்கோவில் மண்டபத்தில் பிரம்மாண்டமான தேசிய முருகன் மாநாடு நடைபெறவுள்ளதாக பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் அறிவித்துள்ளார்.
முருகப் பெருமானின் தத்துவங்கள், ஆன்மீகச் சிந்தனைகள் மற்றும் தமிழ் மொழியோடு அவனுக்குள்ள தொடர்பை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும் என்று டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.
பேரா மாநிலத்தின் பிரசித்தி பெற்ற, 75 ஆண்டுகள் பழமையான உலு கிந்தா தஞ்சோங் ரம்புத்தான் குருவிமலை அருள்மிகு ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் 3-ஆவது மகா கும்பாபிஷேக விழாவில் இன்று கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ சிவநேசன் மேற்கண்ட விவரத்தை கூறினார்.
இம்மாநாட்டில் உள்நாட்டு மற்றும் அனைத்துலக ஆன்மீக அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பும், ஆன்மீகக் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. பேரா மாநில அரசு மற்றும் கோவில் நிர்வாகத்தின் பேராதரவோடு நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில், மலேசியா முழுவதிலும் உள்ள ஆன்மீகப் பெருமக்களும், பொதுமக்களும், இளைஞர்களும் பெருந்திரளாகக் கலந்து சிறப்பிக்குமாறு டத்தோ அ. சிவநேசன் அன்போடு அழைப்பு விடுத்துள்ளார்.









