ஜோகூர், பெர்மாஸ் ஜெயா பகுதியில் சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்திற்கு, 900 மில்லிமீட்டர் விட்டமுடைய பழமையான நிலத்தடி நீர்க்குழாய் வெடித்ததே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஜாலான் பெர்மாஸ் உத்தாரா சாலையின் அடியில் நீர்க்குழாய் வெடித்ததால், சாலை உள்வாங்கி பெரிய பள்ளம் உருவானது. இதில் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விழுந்தன. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்தால் பிளேந்தோங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் நெரிசலுக்கு உள்ளானது.
இது குறித்துப் பேசிய ஜோகூர் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சான் சான் சான், பாதிக்கப்பட்ட நீர்க்குழாயின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், நீர் விநியோகம் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும், பழைய நீர்க்குழாயை முழுமையாக மாற்றுவதே நீண்டகாலத் தீர்வாக இருக்கும் என்றும், அதற்குப் பெரும் செலவு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.








