2026ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் பொதுத் தேர்வில், நன்னெறிக் கல்வி பாடத்தின் வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
திரேட்ஸ் சமூக ஊடகத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவில், வினாத்தாள் மற்றும் அதற்கான விடைகள் எனச் சந்தேகிக்கப்படும் ஆவணங்கள், குறுஞ்செய்திப் பரிமாற்றங்களின் படங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்னதாக ஆங்கிலப் பாட வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது நன்னெறிக் கல்வி பாடத்தின் வினாத்தாளும் கசிந்துள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மலேசியத் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கு, இந்தத் தகவலை வழங்கியவருக்கு நன்றி தெரிவித்ததுடன், மேலதிக விவரங்களையும் ஆதாரங்களையும் தனிப்பட்ட செய்தி மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தகவல்கள் கிடைத்ததும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
எனினும், வினாத்தாள் உண்மையிலேயே கசிந்துள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.








