பினாங்கு மாநிலத்தில் 117 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் புதிய தலைவராக டிஏபி யைச் சேர்ந்த ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வழக்கறிஞரான 52 வயதான ஆர்.எஸ்.என் ராயரின் பதவிக்காலம், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, கடந்த 15 ஆண்டு காலமாக வகித்து வந்த அப்பதவியை ஆர்.எஸ்.என். ராயர், வரும் 2024 ஆம் ஆண்டு ஜுலை 31 ஆம் தேதி வரை வகித்து வருவார் என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
பினாங்கில் உள்ள ஆலயங்கள் உட்பட அதன் பராமரிப்புக்கு உட்பட்ட சொத்துக்களை பாதுகாக்கும் மிகப்பெரிய கடப்பாட்டை கொண்டுள்ள பினாங்கு இந்து அறப்பணி வாரியம், கடந்த 2008 ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தை டிஏபி தலைமையிலான பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றியது முதல் இன்றைய பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசாங்கம், தனது மேற்பார்வையின் கீழ் வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறது.
தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகளில் இந்துக்களின் சமய நலன் சார்ந்த விவகாரங்களை முன்னெடுப்பதற்கு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள், கடந்த 1906 ஆம் ஆண்டில் இந்து அறப்பணி வாரியத்தை நிறுவினர். பினாங்கு, மலாக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று பிரதேசங்களில் அமைக்கப்பட்ட இந்து அறப்பணி வாரியம், தற்போது பினாங்கு மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.








