150 மில்லியன் ரிங்கிட் யூனிட் டிரஸ்ட் முதலீட்டுடன் தொடர்புடைய 2.8 மில்லியன் லஞ்ச ஊழல் வழக்கில், காலஞ்சென்ற தமது கணவர் டத்தோஸ்ரீ புங் மோக்தார் ராடினுக்கு உடந்தையாக செயல்பட்டதாக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் நடிகை ஸிஸி இசெட் அப்துல் சமாத் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இந்த தீர்ப்பை வழங்கியது.
இவ்வழக்கின் படி, அப்போது பெல்ரா நிறுவனத்தின் நிர்வாகம் சாரா தலைவராக பொறுப்பு வகித்த புங் மோக்தார், 150 மில்லியன் ரிங்கிட்டை Public Mutual யூனிட் டிரஸ்டில் முதலீடு செய்யும் வகையில், பெல்ராவின் ஒப்புதலைப் பெற்றுத் தருவதற்காக, லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அதன் படி, முகவர் மாதியிடமிருந்து 2.2 மில்லியன் ரிங்கிட்டும், மற்றொரு முறை 2 லட்சத்து 62,500 ரிங்கிட்டும், பின்னர் நோர்ஹைலி என்பவரிடமிருந்து 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரிங்கிட்டையும் லஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஸிஸி இசெட் உடந்தையாக இருந்ததாக மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த குற்றச்சம்பவங்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு, ஜூன் 12-ஆம் தேதி மதியம் 12.30 மணி முதல் மாலை 5 மணி வரை, தாமான் மெலாவாத்தி பகுதியில் உள்ள Public வங்கி கிளையில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் கினாபத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினரான புங் மோக்தார், கடந்த 2025-ஆம் ஆண்டு, டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் மீதான மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளும் ஏற்கனவே நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.








