வாழ்க்கைச் செலவின உயர்வால பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த மாதம் ஆகஸ்ட் முதல் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 965 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகளுக்கு வாரம் இருமுறை அல்லது மூன்று முறை இலவச காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த நல்ல முன்முயற்சியை மத்திய அரசு ஆதரிப்பதோடு, இதனை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இது குறித்து சார்ல்ஸ் சந்தியாகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடும்பங்கள் பொருளாதார ரீதியாக சிரமப்படும் இந்தச் சூழலில், எந்தவொரு குழந்தையும் பசி வயிற்றுடன் கல்வி கற்கக் கூடாது. கடந்த 2019-ஆம் ஆண்டு நாடு தழுவிய அளவில் 27 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்க முன்மொழியப்பட்ட திட்டத்தை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த உணவுத் திட்டத்திற்கான மூலப்பொருட்களை உள்ளூர் விவசாயிகளிடமிருந்தும் சிறு வணிகர்களிடமிருந்தும் நேரடியாகப் பெறுவதன் மூலம், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் முடியும் என்று பிரேசில் நாட்டின் உதாரணத்தைக் குறிப்பிட்டு அவர் சுட்டிக்காட்டினார்.








