சிங்கப்பூரில் பணமோசடி நடவடிக்கைகளுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் 27 வயது மலேசியர் சின் ஹொக் கான் என்பவர் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
அரசாங்க அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட குழுவை ஒருங்கிணைத்ததுடன், மோசடி மற்றும் பணமோசடி நடவடிக்கைகளுக்கு மலேசியர்களை ஆட்சேர்ப்பு செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மலேசியாவில் குறைந்தது நான்கு பேரைச் சந்தித்து, பணம் எடுப்பது உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்த அவர், மோசடி மூலம் பெறப்பட்ட தங்கப் பொருட்களை ஜோகூர் பாருவில் பெற்றுக் கொண்டதாக சிங்கப்பூர் போலீஸ் தெரிவித்துள்ளது.
குறைந்தது 5 லட்சம் சிங்கப்பூர் வெள்ளி மதிப்பிலான சட்டவிரோத பணத்தை அவர் சுத்திகரித்ததாகவும் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 5 லட்சம் சிங்கப்பூர் வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.








