சுபாங் ஜெயா, பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு தனது சக மாணவியைக் கொன்ற 15 வயது சிறுவன், ஸ்கிசோஃப்ரினியா (skizofrenia) பாதிப்பில் இருந்த போது, சக மாணவர்களை மனிதர்களாக அல்லாமல் கணினி விளையாட்டில் கட்டுப்படுத்தப்படும் ‘NPC’ எனக் கருதியதாக ஷா ஆலாம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடயவியல் மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் இயன் லோய்ட் அந்தோணி கூறுகையில், சிறுவனின் நாட்குறிப்பில் சக மாணவர்கள் தனக்கு எதிராகச் சதி செய்வதாகவும், அவர்கள் இறக்க வேண்டும் என்றும், பலரை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும் பதிவாகியுள்ளது.
அந்தோணியின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற நீதித்துறை ஆணையர் அட்லின் அப்துல் மஜிட், சம்பவத்தின் போதும் சிறுவனின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததை ஏற்றுக் கொண்டார். இதன் அடிப்படையிலேயே கொலைக் குற்றச்சாட்டிலிருந்து அவன் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தோணி, சிறுவனுக்கு ஸ்கிசோஃப்ரினியா மற்றும் உளவியல் ரீதியான கொடூரப் போக்குகள் இருந்ததாகக் கண்டறிந்துள்ளார். இணையம், வன்முறை காணொளி விளையாட்டுகள் மற்றும் அனிமேஷன் உள்ளடக்கங்களால் அவனது நிலை பல ஆண்டுகளில் மோசமடைந்ததாகவும் அறிக்கை கூறுகிறது.








