கோலாலம்பூர், தாமான் கோனோட் பகுதியில் வாகன நிறுத்தம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியதைத் தொடர்ந்து சீனாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை, அங்குள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் முன்பாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில், அதிகாலை 5 மணியளவில் தாமான் லென் செங் பகுதியில் 20 வயதின் இறுதியிலும் 30 வயதின் தொடக்கத்திலும் உள்ள இருவரை செராஸ் மாவட்ட போலீஸ் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவருக்கும் தலை மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்ததால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கண்காணிப்புக் கேமரா பதிவுகளின் முதற்கட்ட ஆய்வில், மேலும் சிலர் இந்தக் கைகலப்பில் ஈடுபட்டிருப்பதும், இரும்புக் கம்பி ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரைப் போலீஸ் துறை தேடி வருகிறது.








