மலேசிய இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த சிறு தொழில்முனைவோர் தங்களின் வணிகத்தைத் தொடங்கவும் விரிவுபடுத்தவும் ஏதுவாக, அக்ரோ வங்கி புதிய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அக்ரோ ஐ-சினார் எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், 5,000 ரிங்கிட் முதல் கடனுதவி பெற முடியும். அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்துடன், ஆண்டுக்கு 4.75 விழுக்காடு சிறப்பு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, எந்தவொரு பிணையமும் இன்றி வழங்கப்படும் இக்கடனுடன், தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு 50,000 ரிங்கிட் வரையிலான இலவச கடன் தகாஃபுல் காப்புறுதியும் வழங்கப்படுகிறது.
உணவகங்கள், சில்லறை வணிகம், உணவுப் பொருட்கள் விநியோகம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் உணவுத்துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
இத்திட்டம் சிறு தொழில்முனைவோரின் நிதிச் சுமையைக் குறைத்து, அவர்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் என அக்ரோ வங்கியின் குழுமத் தலைவர் தெங்கு அஹ்மாட் பட்லி ஷா ராஜா ஹுசேன் தெரிவித்தார்.
இதற்கிடையில், இத்திட்டத்தை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முஹமட் சாபு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இந்தியச் சமூகத்தினரிடையே அரசாங்கத்தின் நிதியுதவித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் அக்ரோ வங்கி நடவடிக்கை எடுக்கவுள்ளது.








