சிலாங்கூர் சுபாங் விமானப்படைத் தளத்தில் சந்தேகத்திற்கிடமான பயணப் பெட்டிகளைச் சோதனையிட்டபோது, 96.6 கிலோ எடையிலான போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 17ஆம் தேதி, மலேசிய அரச விமானப்படை அதிகாரிகள் மேற்கொண்ட வழக்கமான சோதனையின்போது, பாதுகாப்புச் சோதனை செய்யப்பட்டதற்கான ஒட்டுவில்லைகள் இல்லாத பயணப் பெட்டிகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, ராணுவத் தரைப்படைப் பாதுகாப்புப் பிரிவினர் ஸ்கேனர் மூலம் சோதனையிட்டதில், பெட்டிகளுக்குள் சந்தேகத்திற்கிடமான பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து விமானப்படை அதிகாரிகள் மற்றும் இரண்டு வீரர்கள் என மொத்தம் ஏழு பேர் விசாரணைக்கு உதவுவதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் போலீஸ் துறையின் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்துள்ளதாக விமானப்படைத் தளபதி முஹமட் நோராஸ்லான் அரிஸ் தெரிவித்துள்ளார்.








