மலேசியாவுக்கு அண்மையில் வருகை புரிந்த பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மெக்ரோன், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய முன்வளாகத்தில் காலணியுடன் காணப்பட்ட விவகாரம் தொடர்பில், இந்து சமூகத்திடம் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா மன்னிப்புக் கோரியுள்ளார்.
இன்று பத்துமலைத் திருத்தலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரான்ஸ் அதிபரின் வருகை குறித்து தங்களுக்கு முன்கூட்டியே எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.
முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால், முறையான ஏற்பாடுகளைச் செய்து, ஆலய மரபுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவரை வரவேற்று கௌரவித்திருப்போம் என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், ஆலய வளாகத்தில் காலணியுடன் வந்த சம்பவம் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காக இந்து சமூகத்திடம் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் டான் ஶ்ரீ ஆர். நடராஜா உறுதியளித்துள்ளார்.
விஐபி பிரமுகர்களின் வருகையின்போது பாதுகாப்பு அதிகாரிகள் சூழ்ந்திருப்பதால், ஆலயத்தில் காலணிகளைக் கழற்ற வேண்டும் என்ற அறிவிப்புகள் அவர்களின் கவனத்துக்குச் செல்லாமல் போயிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.








