முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் அனுமதிக்கும், கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் அமைச்சர் ஹன்னா இயோ எதிர்ப்பு தெரிவித்ததாக பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெற்ற மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் ரகசியம் நீக்கப்பட்ட குறிப்புகள் இதனை உறுதிப்படுத்துவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்கும் திட்டத்திற்கு ஹன்னா இயோ எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இருப்பினும், மாமன்னரின் உத்தரவின்படி மன்னிப்புப் பிரகடனத்தில் அவர் கையெழுத்திட்டதாக லிம் விளக்கமளித்துள்ளார்.
அமைச்சராகவும், ஜசெக கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவராகவும் தனது கடமையை நிறைவேற்றி, மாமன்னருக்கும் தமது முழு விசுவாசத்தை ஹன்னா இயோ வெளிப்படுத்தியுள்ளதாகவும் லிம் குவான் எங் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








