சிலாங்கூர் மாநிலத்தில் வரும் நவம்பர் 23 முதல் 27 -ஆம் தேதி வரை கடல் நீர்மட்டம் உயரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நாளை நவம்பர் 21 -ஆம் தேதி வரை அடிக்கடி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை விரைவாக வெளியேற்றுவதுடன், ஆறுகளின் நீரோட்டம் மற்றும் கடல் நீர்மட்டத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில் இந்த இரு வானிலை மாற்றங்களையும் எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நேற்றிரவு செகோலா கெபாங்சாஆன் டத்தோ மஹாராஜா லேலாவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.








