மாரா எனப்படும் மஜ்லிஸ் அமானா ரக்யாட் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், இந்த ஆண்டுக்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவடைவதற்கு முன்பு அவை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகவும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற 2026 -ஆம் ஆண்டிற்கான மாரா தொழில்முனைவோர் விருது விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சட்டத் திருத்த மசோதாவின் இறுதி வரைவு விரைவில் தயாராகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், மாரா வழங்கும் தொழில்முனைவோர் நிதியுதவியை எதிர்காலத்தில் சுமார் 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளதாகவும் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு இதற்காக 552 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதி அதிகரிப்பு, மாராவின் கேட் டு குளோபல் (Gate to Global) திட்டத்தில் மேலும் அதிகமான தொழில்முனைவோர் பங்கேற்று அனைத்துலக அளவில் சந்தைகளில் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்த ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள நிறுவனங்களை புர்சா மலேசியா பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான திட்டங்களையும் முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.








