பேரா, கோலா கங்சார் மலாய் கல்லூரியில் மூன்றாம் படிவம் பயின்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விரிவான விசாரணை நடத்தி அதன் முடிவுகளைப் பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் படைத் தலைவர் மற்றும் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாட்லீனா சீடேக் ஆகியோருடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை மூலம் மாணவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முழு தங்கும் வசதியுள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக, வகுப்புக்கு வராத மாணவர்கள் மற்றும் மருத்துவப் பராமரிப்புப் பிரிவில் இருப்பவர்களைக் கண்காணிப்பதில் அலட்சியம் இருக்கக்கூடாது என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.








