மலேசிய அரச விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விமானிகள், பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதில் லெப்டினன்ட் மற்றும் கேப்டன் பதவி வகிக்கும் அதிகாரிகளும் விமானிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாட்டின் பாதுகாப்புப் படையினரே இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவது கவலைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
போலீஸ் துறையும் ஆயுதப்படைகளும் விசாரணையை முழுமையாக முடிக்கக் கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறிய அன்வார், நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக யாரும் கருதக்கூடாது என்பதற்காகவே இதனைப் பொதுவெளியில் தெரிவித்ததாக விளக்கமளித்தார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து போலீஸ் படைத் தலைவர், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின், ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் ஆகியோருடன் கலந்துரையாடியதாகவும், குற்றவாளிகள் மீது சமரசமின்றி நடவடிக்கை எடுக்க அனைவரும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையில், 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பல பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அல்லது அமலாக்கப் பிரிவினர் என யாராக இருந்தாலும் இத்தகைய குற்றச்செயல்களை அனுமதிக்க முடியாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.








