பேரா, கம்போங் பாவோங்கில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால் வனப்பகுதிக்குள் செல்வதையும் தவிர்த்து வருகின்றனர்.

நேற்று புதன்கிழமை மூங்கில் சேகரிக்கச் சென்ற 65 வயதான பழங்குடியின ஆடவர் ஙா இதாம், புலி தாக்குதலில் உயிரிழந்தார்.
கடந்த 13 ஆண்டுகளாக அக்கிராமத்தின் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் ஜெஃபிரிடி அபாஸ், தமது பகுதியில் இதுபோன்ற சம்பவம் நிகழ்வது இதுவே முதல்முறை எனத் தெரிவித்தார்.

மேலும், கிராம மக்களில் 80 முதல் 90 விழுக்காட்டினர் மூங்கில், பிரம்பு உள்ளிட்ட வனப் பொருட்களைச் சேகரிப்பதையே முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சுமார் இரண்டு மாதங்களில் பழங்குடியின மக்களைப் புலி தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்திய இரண்டாவது சம்பவம் இதுவென சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் தெரிவித்தார்.

வனவிலங்கு பாதுகாப்புத் துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசாங்க இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








