Nov 20, 2026
Thisaigal NewsYouTube

கடற்படை பயிற்சி அதிகாரி சூசைமாணிக்கம் மரண வழக்கில் 8 ஆண்டுகளாக நீடிக்கும் விசாரணை: சாட்சிகளைத் தேடும் பணியில் போலீஸ் துறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடற்படை பயிற்சி அதிகாரி சூசைமாணிக்கம் மரண வழக்கில் 8 ஆண்டுகளாக நீடிக்கும் விசாரணை: சாட்சிகளைத் தேடும் பணியில் போலீஸ் துறை

கடற்படை பயிற்சி அதிகாரி ஜெ. சூசைமாணிக்கம் மரண வழக்கில், எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் முக்கியச் சாட்சிகளைத் தேடி விசாரிக்கும் பணியில் போலீஸ் துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மருத்துவச் சிகிச்சை மறுக்கப்பட்டதன் காரணமாகவே சூசைமாணிக்கம், உயிரிழந்ததாக ஈப்போ உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், விசாரணை ஆவணங்கள் இன்னும் முழுமையடையவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் Saifuddin நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டதால், விசாரணைக்குத் தேவையான சாட்சிகளைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கோப்பெங் எம்.பி. டான் கார் ஹிங் கேள்விக்கு பதில் அளிக்கையில் சைஃபுடின் மேற்கண்டவாறு கூறினார்.

சில சாட்சிகள் பணியிலிருந்து ஓய்வுபெற்றிருக்கலாம், வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் அல்லது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கலாம் என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், கூடுதல் ஆதாரங்களைத் திரட்டுவதற்காக ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட சில சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தவும் போலீஸ் துறை திட்டமிட்டுள்ளது.

விசாரணை ஆவணங்கள் முழுமையடைந்ததும், அவை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சர் சைஃபுடின் தெரிவித்தார்.

27 வயதான ஜெ. சூசைமாணிக்கம், கடந்த 2018ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி பேராக் மாநிலம் லுமுட்டில் உள்ள கேடி சுல்தான் இட்ரிஸ் கடற்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தார்.

அவரது மரணம் தொடர்பாக ஆரம்பத்தில் வழங்கப்பட்ட திறந்த தீர்ப்பை, 2024ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி ஈப்போ உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

நீதிபதி அப்துல் வஹாப் முஹமட் வழங்கிய தீர்ப்பில், லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) எனப்படும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சூசைமாணிக்கத்திற்கு கடற்படை அதிகாரிகள் மருத்துவச் சிகிச்சை வழங்க மறுத்ததே அவரது மரணத்துக்கு நேரடிக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொலைக் குற்றத்துக்கான குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின்கீழ் போலீஸ் துறை மீண்டும் விசாரணையைத் தொடங்கியது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →