திரங்கானுவில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது வணிக நிறுவனங்களை மூட வேண்டும் என்ற உத்தரவை விமர்சித்த மலாக்கா ஜசெக தலைவர் கூ பொயே தியோங்கை, மலாக்கா பிகேஆர் இடைக்காலத் தலைவர் அடாம் அட்லி கண்டித்துள்ளார்.
இது சமய அடிப்படையைக் கொண்ட மாநில நிர்வாக விவகாரம் என்றும், அந்தந்த மாநிலங்களின் சட்டங்களையும் சமய உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வெள்ளிக்கிழமை தொழுகையின்போது முஸ்லிம் ஆண்கள் வணிக நடவடிக்கைகளை நிறுத்துவது இஸ்லாமிய மதக் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் வெளியிட்ட கருத்தைத் திரும்பப் பெற்று, கூ பொயே தியோங் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அடாம் அட்லி கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், உத்தரவை மீறுவோருக்கு 2,000 ரிங்கிட் அபராதமும், ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும், இந்த நடைமுறை முஸ்லிம் அல்லாதவர்களின் வணிகச் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும் கூ பொயே தியோங் விமர்சித்திருந்தார்.








