பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மடானி அரசாங்கத்துக்கு இனியும் ஆதரவு வழங்க விருப்பமில்லையெனில், அடுத்த பொதுத் தேர்தல் வரை காத்திருக்காமல் பாரிசான் நேஷனல் கூட்டணி தற்போதே அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அமானா தலைவர் முஹமட் சாபு வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்துக்கும், பக்காத்தான் ஹராப்பானுக்கும் பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான அரசியல் உறவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
மடானி அரசாங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கருத்துரைத்த அவர், அன்வார் தலைமையிலான அரசாங்கத்தைத் தொடர்ந்து ஆதரிப்பவர்கள் மட்டுமே அதன் சாதனைகளைக் கொண்டாட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததைத் தொடர்ந்து, மாமன்னரின் ஆலோசனையின் பேரில் பக்காத்தான் ஹராப்பானும் பாரிசான் நேஷனலும் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தன.








