சிலாங்கூர் குழந்தைகள் இலக்கிய விழா 2026, இன்று ஷா ஆலாமில் உள்ள ஷா ஆலாம் கான்வென்ஷன் செண்டர் மற்றும் அனிக்கா வால்க், எஸ்.ஏ. செண்ரல் பகுதியில் தொடங்கியது.
முதன்முறையாக நடைபெறும் இந்த நான்கு நாள் விழாவில், குழந்தைகளுக்கான புத்தகங்கள் மட்டுமின்றி கதை சொல்லல், இலக்கியம், கலை, படைப்பாற்றல், கல்வி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. விழா ஆகஸ்ட் 31 வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற ஜெயப்பூர் இலக்கிய விழா அனுபவத்தை முன்மாதிரியாகக் கொண்டு, குழந்தைகள் புத்தகங்களைப் பார்ப்பதோ வாங்குவதோ மட்டுமின்றி, கதைகளைக் கேட்டு, கற்பனை செய்து, படைப்பாற்றலுடன் செயல்படும் வகையில் இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் பொது நூலகக் கழக இயக்குநர் டத்தோ படுக்கா மஸ்துரா ஹாஜி முகமட் தனது வரவேற்புரையில் தெரிவித்தார்.
இந்தியாவைச் சேர்ந்த மனிஷா செளத்ரி, கீதா ராமனுஜம், சீனாவின் ஷாங் மிங்சாவ், யூ லிகியோங், மலேசியாவைச் சேர்ந்த வில்லியன் புவான் உள்ளிட்ட முக்கிய அனைத்துலக எழுத்தாளர்கள், கதைசொல்லிகள் மற்றும் சிறார் இலக்கிய ஆளுமைகள் விழாவில் பங்கேற்கின்றனர்.
இந்த அனைத்துலக புத்தக கண்காட்சி விழாவில் பன்னாட்டு பிரபல புத்தக நிறுவனங்களும் பங்கு கொண்டு, இந்த கண்காட்சிக்கு சிறப்பு சேர்த்துள்ளன.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் அனைத்துலக வர்த்தகக் கண்காட்சிகள், புத்தகக் கண்காட்சிகள் மற்றும் இலக்கிய விழாக்களுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருபவர் முகமட் அலி ஆவார்.
இந்தியப் புத்தகங்கள், பதிப்பகங்கள் மற்றும் இலக்கிய உலகை வெளிநாடுகளுடன் இணைக்கும் பிரதான பணியில் ஈடுபட்டு வருகிறார் சென்னையை சேர்ந்த முகமட் அலி.
இந்தியாவின் பெங்களூருவை தளமாகக் கொண்ட கதாலய டிரஸ்ட் – தி ஹவுஸ் ஆப் ஸ்டோரிஸ் அமைப்பின் நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் கீதா ராமனுஜம். 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட கீதா ராமனுஜம், இந்தியாவில் நவீன ஸ்டோரி தெல்லிங் மூவ்மண்ட்டை முன்னெடுத்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் கதை சொல்லலை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல், குழந்தைகளின் கற்பனைத் திறன், சிந்தனை, மொழித் திறன் மற்றும் கற்றல் ஆர்வத்தை வளர்க்கும் கல்விக் கருவியாக பயன்படுத்தியுள்ளார்.
மனிஷா செளத்ரி, இந்தியப் பதிப்பக உலகிலும், குழந்தைகள் இலக்கிய வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க அனுபவம் கொண்டவர் ஆவார். உலகப் புகழ்பெற்ற ஜெய்பூர் இலக்கிய விழா பதிப்பகப் பிரிவான ஜெய்பூர் புக் மார்க்கை செம்மையாக வழிநடத்தி வருகிறார்.
குழந்தைகளை வாசிப்பின் பக்கம் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் ஈர்க்க வேண்டும். ‘நீ 20 புத்தகங்களைப் படித்தால் 30 மதிப்பெண்கள் கிடைக்கும்’ என்று அழுத்தம் கொடுத்து வாசிக்க வைப்பது சரியான அணுகுமுறை அல்ல.
குழந்தைகள் தாங்களாகவே புத்தகங்களைத் தேடி வாசிக்க விரும்பும் சூழலை நாம் உருவாக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களுக்குப் பிடித்த வாசிப்பு விருப்பங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. குழந்தைகள் தாங்கள் விரும்பும் புத்தகங்களைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிறார் மனிஷா செளத்ரி.
இந்த புத்தக கண்காட்சி விழா, நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 200 நிகழ்ச்சிகள், நூற்றுக்கும் மேற்பட்ட காட்சியாளர்களுடன் நடைபெறுகின்றன. குழந்தைகள் புத்தக உலகை நோக்கி மேலும் நெருங்குவதற்கான ஒரு புதிய இலக்கிய அனுபவமாக இந்த விழா அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.








