வருகிற ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில் மக்கள் தங்களுக்குப் பெரும்பான்மை வழங்கினால், வேறு எந்தவொரு கூட்டணியுடனும் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவரும், இடைகால மந்திரி பெசருமான டத்தோ ஒன் ஹஃபீஸ் காசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜோகூரில் பாரிசான் நேஷனல், பாஸ் கட்சி அல்லது பிற கட்சிகளுடன் கூட்டு வைக்கக்கூடும் என்ற யூகங்களுக்குப் பதிலளித்த அவர், 56 தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்ததில் இருந்தே பல அரசியல் தாக்குதல்களையும், 'இனவாதிகள்' என்ற முத்திரையையும் எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
ஜசெக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க மறுத்ததால் தங்களை ஆணவக்காரர்கள் என்று சிலர் விமர்சிப்பதாக ஒன் ஹஃபீஸ் காசி கூறினார்.
தற்போதைய ஜோகூர் அரசு 100 விழுக்காடு பாரிசான் நேஷனல் அரசு மட்டுமே என்றும், இது மற்ற மாநிலங்களைப் போன்ற கூட்டாட்சி அரசு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மக்களின் ஆதரவு கிடைத்தால் தேர்தல் முடிவுக்குப் பிறகும் தனித்தே ஆட்சி அமைக்கப்படும் என்று உறுதிபடக் கூறிய அவர், அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே இந்தத் தனித்துப் போட்டி முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.








