கோலாலம்பூர், பங்சார் , லோரோங் மாருஃப் 1-இல் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளி பள்ளி வளாகத்திற்குள் இன்று நண்பகல் வேளையில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் பலத்த சேதமடைந்தன.
இன்று மதியம் 12:13 மணியளவில் இந்த விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததாகக் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு பாந்தாய் மற்றும் செபுத்தே நிலையங்களைச் சேர்ந்த 12 தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பள்ளி வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹோண்டா ஒடிஸி மற்றும் டொயோட்டா ஆல்டிஸ் ஆகிய இரு வாகனங்களின் மீது அந்தப் பெரிய மரம் விழுந்திருந்தது. தீயணைப்புப் படையினர் இரண்டு மின்சாரக் ரம்பங்களைக் கொண்டு மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினர். கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் வழங்கிய கனரக இயந்திரத்தின் உதவியுடன் மரம் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை எனத் தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.








