மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் குறித்து பேஸ்புக் பக்கத்தில் அவதூறான கருத்து வெளியிட்ட பாதுகாவலர் ஒருவருக்குக் கூச்சிங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 8 மாத சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.
நீதிபதி ஐரிஸ் அவென் ஜோன் முன்னிலையில், குற்றஞ் சாட்டப்பட்ட 46 வயதுடைய ராடென் நோர்ஹக்கீம் ராடென் இப்ராஹிம் என்ற அந்த பாதுகாவலர், தனக்கு எதிரான குற்றத்த ஒப்புக்கொண்டார். அவர், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி பிரபலமான செய்திப் பக்கத்தின் பின்னூட்டப் பகுதியில் அரச பரிபாலனத்திற்கு எதிராக எதிர்மறையான எண்ணங்களைத் தூண்டும் வகையில் இக்கருத்தைப் பதிவிட்டதாக, தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதாகவும், அவர் ஒட்டுமொத்த மலேசியர்களிடமும் மாமன்னரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.








