தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிகமாட் நாடாளுமன்றத் தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் கூடுதல் நிதியைப் பெற்றுத் தரத் தாம் தொடர்ந்து பாடுபடப் போவதாக தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
இன்று சிகமாட், டத்தாரான் சிகமாட்டில் நடைபெற்ற நம்மோடு மடானி திட்டம் எனும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய போது, யுனேஸ்வரன் ராமராஜ் இந்த உத்தரவாதத்தை அளித்தார்.
அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை நேரடியாகப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு பாலமாக இத்திட்டம் செயல்படுவதாகக் குறிப்பிட்ட யுனேஸ்வரன், நாட்டின் பல்லினச் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், அண்டை வீட்டு உறவுகளை மேம்படுத்தவும் 'கம்போங் ருக்குன் தெத்தாங்கா' அமைப்புகள் மிக முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்வதே மடானி அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், சிகமாட் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான சமூக-பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் துணை அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.








