நாட்டின் பொது அமைதி, ஒழுங்கு, மற்றும் சட்டத்தை நிலைநாட்டுவதில் முக்கியப் பொறுப்பில் உள்ள போலீஸ்காரர்கள், சட்டத்தைக் கடைப்பிடிக்கத் தவறுவார்களேயானால் அவர்கள் போலீஸ் படைக்கு தேவையில்லை என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.
மக்களுடனும், காவல் துறையுடனும் பிரிக்க முடியாக நீடித்த உறவுகளும், பாரம்பரியமும் உள்ளன. அத்தகைய தொடர்பிற்கு குத்தகத்தை ஏற்படுத்தம் போலீஸ்காரர்கள் தொலைந்து போகட்டும் என்று ஐஜிபி காட்டமாக பதில் அளித்தார்.
அண்மைய காலமாக போலீஸ்காரர்களின் தவறான நடத்தை தொடர்பான சம்பவங்கள் எண்ணிக்கை ஒன்று, இரண்டு பதிவு செய்யப்பட்டு வருவது குறித்து தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தமது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
மக்களுடன் கைக்கொடுப்பதை சித்தரிக்கும் சின்னம், லஞ்ச ஊழலை வேரறுப்பதற்கு கொண்டுள்ள சுலோகம் மற்றும் மக்களுடன் கொண்டுள்ள நல்லுறவை பிரிக்க முடியாத உறுதிப்பாடு போன்றவை அரச மலேசிய போலீஸ் படையின் தலையாய பெருமையாகும். ஆனால், ஓரிரு போலீஸ்காரர்களின் தவறான நடத்தையினால் அத்துறைக்கு களங்கம் ஏற்பட்டு வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.








