ஜோகூர் பாரு, ஜூலை.28-
ஜோகூர் பாருவில் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் 18 மாதக் குழந்தை உயிரிழந்த விவகாரம், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு குழந்தையின் சொந்தத் தந்தையே முதன்மை சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடக்கத்தில் அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம் எனப் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கில், உடற்கூறாய்வு அறிக்கையின்படி குழந்தையின் இடுப்புப் பகுதியில் காயங்களும், ஆசனவாயில் வீக்கமும் கண்டறியப்பட்டன. குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் டிஎன்ஏ (DNA) சோதனைகள் மற்றும் 13 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின், தற்போது இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 302- ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகச் சிங்கப்பூரில் தொழிலாளியாகப் பணிபுரியும் குழந்தையின் 40 வயது தந்தை மற்றும் 13 குற்றப் பின்னணிகளைக் கொண்ட அவரது மாமா ஆகிய இருவரையும் ஜோகூர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








