டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட PJU 1/20 பகுதியில் நீண்டநாட்களாக நிலவி வரும் கால்வாய் மற்றும் வடிகால் பிரச்னைக்குத் தீர்வு காண ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் செலவில் தீர்வு காண்பதற்கான வழிவகைகள் ஆராயப்படும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்துள்ளார்.
இப்பகுதியில் இன்று காலையில் நடைபெற்ற தபாக் கே தபாக் மக்கள் சந்திப்புத் திட்டத்தின் கீழ் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினரான கோபிந்த் சிங், சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களுடன் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டார். மழைக்கால வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் இந்த மேம்பாட்டுப் பணிகள் அமையவுள்ளன என்பதையும் அவர் விவரித்தார்ை.
இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகர மன்ற உறுப்பினர்களுடன் அதிகாரப்பூர்வ சந்திப்பு நடத்தப்படும் என்றும், அதன் பின்னரே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் நிதியைப் பெறுவது மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் இது நிரந்தர தீர்வு இல்லை என்றாலும் தற்காலிக தீர்வை காண வேண்டிய நிலை உள்ளது. முதலில் வெள்ளத்தடுப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் விளக்கினார்.












