பேராக், தாப்பா அடர்ந்த வனப் பகுதியில் உள்ள குனோங் பத்து பூத்தே து புத்தே மலையில் கடந்த மே 23-ஆம் தேதி 14 பேர் கொண்ட குழுவுடன் மலையேறியபோது வழிதவறி காணாமல் போன 49 வயதான ஜாஸ்லிந்தா சாலுடின் என்ற பெண், 14 நாட்களுக்குப் பிறகு இன்று மாலை லுபோக் பகாரு ஓராங் அஸ்லி பூர்வக்குடி கிராமத்தில் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
அன்று மலையேறும்போது ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வெடுத்த அவர், பின்னர் தனியாகச் சிகரத்தை நோக்கிச் சென்றுள்ளார். சிகரத்தை அடைந்ததாக தரையில் செய்தி எழுதி வைத்த அவர், மே 24-க்குப் பிறகு வழிதெரியாமல் அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக் கொண்டார். அவர் காணாமல் போனதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறை, போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் களமிறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் பணிக்காக அகஸ்டா ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு, வீரர்கள் மலைச்சிகரங்களுக்கு வின்ச் தொழில்நுட்பம் மூலம் இறக்கப்பட்டு தேடப்பட்டனர். 14 நாட்களாக எவ்வித தடயமும் கிடைக்காமல் தேடுதல் பணி சுருக்கப்பட்ட நிலையில், இன்று உள்ளூர் ஓராங் அஸ்லி பூர்வக்குடி மக்கள் அவரைப் பத்திரமாகக் கண்டுபிடித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தற்போது அவர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.








