கோலாலம்பூர், ஜூலை.26-
பகாங் மாநிலம் பெந்தோங்கில் நேற்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஆறு இந்திய இளைஞர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இன்று தமது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாமும் தனது மனைவி டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் இந்தத் துயரச் சம்பவத்தால் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், சாலைப் பாதுகாப்பை ஒரு போதும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை இந்தத் துயரச் சம்பவம் அனைவருக்கும் நினைவூட்டுகிறது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில், ஜாலான் காராக் லாமா சாலையில் தெமர்லோ நோக்கிச் சென்ற Toyota Vios கார், ஒரு டன் லோரியுடன் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஆறு இந்திய இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லோரி ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.
முதற்கட்ட போலீஸ் விசாரணையில், குவாந்தான் நகரிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற கார், மலைச்சரிவில் இறங்கும் போது எதிர்புற சாலைக்குள் நுழைந்து லோரியுடன் மோதியிருக்கலாம் என்று நம்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








