நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலவி வரும் தற்போதைய பாரம்பரிய ஆட்சிமுறைச் சிக்கலை, நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லாமல் பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர உடன்பாடு மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
தேசிய டிவெட் தினக் கொண்டாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணைப்பிரதமர், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சி அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் அரச சபையான தேவான் கெஅடிலான் டான் உண்டாங் மன்றத்தின் செயல்பாடுகளையும், பாரம்பரிய வழிமுறைகளையும் அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நீதிமன்றத்தில் நீடிக்கும் நீண்ட கால மோதல்களைத் தவிர்த்து, கலந்துரையாடல் மூலம் மட்டுமே மாநிலத்தின் நிலைத்தன்மையைப் பாதிக்காத ஒரு சுமுகமான தீர்வை எட்ட முடியும் என்றும் ஜாஹிட் சுட்டிக்காட்டினார்.








