Nov 25, 2026
Thisaigal NewsYouTube

நேபாளப் பேரிடர்: 54 மலேசியக் குடும்பங்களுக்கு 5.4 லட்சம் ரிங்கிட் நிதியுதவி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நேபாளப் பேரிடர்: 54 மலேசியக் குடும்பங்களுக்கு 5.4 லட்சம் ரிங்கிட் நிதியுதவி

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரிடரால் பாதிக்கப்பட்ட 54 மலேசியக் குடும்பங்களுக்கு, மடானி அரசாங்கம் மொத்தம் 5 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் ரிங்கிட் வீதம் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் அமைந்துள்ள பெர்கேசோ தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், அரசாங்கத்தின் சார்பில் இந்த நிதியுதவியைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகளிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்தர் நாயர் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகளின் முக்கியப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

நிதியுதவியைப் பெற்றுக் கொண்ட குடும்பங்களின் பிரதிநிதிகள் தங்களது உணர்வுகளையும் நன்றியையும் திசைகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த நிதி உதவி தங்களின் பொருளாதார சுமையை ஓரளவு குறைக்க வழிவகுத்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து அறியவே தாங்கள் நாட்டம் கொண்டுள்ளதாக தந்தை எஸ். ராமுவை இழந்த பிரேஷா தெரிவித்தார்.

இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம் என்று நேபாள அரசாங்கம் கூறிய போதிலும் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே இங்கு வங்கிப் பிரச்னை உட்பட பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண முடியும் என்று மகனை இழந்த கிள்ளானைச் சேர்ந்த பாலன் வரதன் தெரிவித்தார்.

இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு 12 ஆண்டுகள் ஆகலாம் என்று நேபாள அரசாங்கம் கூறிய போதிலும் அதனை 45 நாட்களாக மாற்றுவதற்கான நடைமுறையை மலேசிய அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தனது மாமனார் கிருஷ்ணன் வடிவேலுவை இழந்த சுப்பிரமணியம் முருகையா தெரிவித்தார்.

பலருடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது உட்பட அவற்றிலிருந்து பணத்தை எடுக்க முடியாமல், பல குடும்பங்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். சொத்து மற்றும் பங்குப் பணம் போன்ற விவகாரங்களும் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டால் மட்டுமே தற்போது அவர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்று சுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →