கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பாக பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, வெற்றி பெற்றப் பின்னர் கட்சித் தாவல் நடவடிக்கை மூலமாக பெர்சத்து கட்சியில் இணைந்த அம்பாங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுரைடா கமாருடீன், பிகேஆர் கட்சிக்கு ஒரு கோடி வெள்ளி இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு ஒரு சரியான நடவடிக்கையாகும் என்று வரவேற்கப்பட்டுள்ளது.
தோட்டம் மற்றம் மூலத் தொழில் துறை முன்னாள் அமைச்சரான ஜுரைடாவிற்கு எதிராக பிகேஆர் கட்சி மேற்கொண்ட சட்ட நடவடிக்கை, கட்சித் தாவல் பேர்வழிகளுக்கு சரியான பாடமாகும் என்று பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் தெரிவித்துள்ளார்.








