ஷாஹ் அலாம், மே 27-
விதைப்பை அறுவைச் சிகிச்சையின் காரணமாக, உடலுறவு புரிவதற்கான தன்மையை இழந்துள்ள 64 வயது முதியவருக்கு 500 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டு தொகையை வழங்க, சிலாங்கூர், செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்தாண்டு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
அந்த தீர்ப்புக்கு எதிராக, அரசாங்க தரப்பு ஷாஹ் அலாம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற வழக்கில், நீதித்துறை ஆணையர் சோங் யோவ் சோய், முந்தைய தீர்ப்பை நிலைநிறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட முதியவர் உடலுறவு புரிவதற்கான தன்மையை இழந்ததற்காக 150 ஆயிரம் வெள்ளியும் மன உளைச்சலுக்கு ஆளானதற்காக 200 ஆயிரம் வெள்ளியையும் அரசாங்கம் இழப்பீடாக வழங்க வேண்டுமென சோங் யோவ் சோய் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு, சம்பந்தப்பட்ட முதியவருக்கு செலாயாங் மருத்துவமனையில், விதைப்பை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அந்த அறுவைசிகிச்சையை செய்துகொள்வதால் ஏற்படும் விளைவுகளை, தமக்கு அறுவைச்சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என கூறி, அம்முதியவர் சுகாதார அமைச்சு, செலாயாங் மருத்துவமனையின் இயக்குநர், அலட்சியமாக நடந்துக்கொண்ட 5 மருத்துவர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்கை தொடுத்திருந்தார்.
உடலுறவுக்கான தகுதியை இழந்ததால், தமது குடும்ப உறுப்பினர்களே தம்மை கேலி செய்வதாகவும் அவர் வழக்கு மனுவில் கூறியிருந்தார்.








