பள்ளிகளில் குண்டர் தனம், போதைப்பொருள் புழக்கம், பகடிவதை போன்ற சமூகச் சீர்கேடுகள் மற்றும் குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் சிறப்பு தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் துங்கு முஹ்ரிஸ் படிவம் 6 கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் , கல்விக் கழகங்கள் வன்முறைகள், மன உளைச்சல்கள் மற்றும் இன வெறுப்பு போன்ற ஆபத்தான சித்தாந்தங்கள் அற்ற பாதுகாப்பான சூழலாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மிரட்டல் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இனி நாட்டில் மீண்டும் நிகழக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், வெளிநபர்களின் அத்துமீறல்கள் மற்றும் பாலியல் தொல்லைகளைத் தடுக்கவும் போலீஸ் துறை மற்றும் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுடன் இணைந்து உள்துறை அமைச்சு தீவிரமாகச் செயல்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.








