அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, மக்களின் நலன் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக போக்குவரத்து அமைச்சும், ஜோகூர் மாநில அரசும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
ஜோகூர், கூலாய், இரயில் நிலையத்தில் நடைபெற்ற 'ஷட்டில் செலாத்தான்' இரயில் சேவை தொடக்க விழாவில் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசியுடன் இணைந்து அந்தோணி லோக் பங்கேற்றார்.
அண்மையில் தங்களுக்குள் ஏற்பட்ட சமூக ஊடக அரசியல் விவாதங்கள் குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அமைச்சர், முதிர்ந்த தலைவர்கள் அரசியலையும் நிர்வாகத்தையும் தனித்தனியே பிரிக்க வேண்டும் என்றார்.
அரசியல் சிக்கல்களை அரசியல் வழியிலேயே தீர்க்கலாம் என்றும், ஆனால் மக்களின் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் கூட்டரசு மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு வழக்கம் போல் தொய்வின்றித் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.








