மலேசியாவின் நவீன மனநல மருத்துவத்தின் தந்தையாகப் போற்றப்பட்ட பிரபல மனநல மருத்துவ நிபுணர் டான்ஸ்ரீ டாக்டர் எம். மகாதேவன் இன்று தனது 96-வது வயதில் காலமானதையொட்டி பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
டாக்டர் மகாதேவன், பேரா, தஞ்சோங் ரம்புத்தான் மனநல மருத்துவமனையின் இயக்குநராகப் பதவி வகித்த போது, மலேசிய வரலாற்றையே உலுக்கிய பிரபல ஆயுதக் கொள்ளைக்காரனான 'போத்தா சின்' மனநிலையைப் பரிசோதிக்கும் முக்கியப் பொறுப்பை ஏற்றிருந்தார். 1980-ஆம் ஆண்டில், போத்தா சின் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் தகுதியோடு இருக்கிறானா என்பதைக் கண்டறிய, 19 நாட்கள் தனது தீவிர கண்காணிப்பில் வைத்து டாக்டர் மகாதேவன் பரிசோதனை செய்தார்.
பரிசோதனைக்குப் பின் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த டாக்டர் மகாதேவன், "போத்தா சின் ஒரு சாதாரண குற்றவாளி அல்ல; அவன் அசாதாரண புத்திசாலித்தனம் கொண்ட ஒரு 'வழிதவறிய மேதை' " என்று குறிப்பிட்டு அதிரவைத்தார்.
மேலும், தஞ்சோங் ரம்புத்தான் மருத்துவமனையில் போத்தா சின் கடைப்பிடித்த கடுமையான ஒழுக்கம், தாய்ச்சி தற்காப்புக் கலைப் பயிற்சி மற்றும் தேசிய கீதத்திற்கு அவன் கொடுத்த மரியாதை போன்ற பல சுவாரசியமான தகவல்களையும் பிற்காலத்தில் டாக்டர் மகாதேவன் பகிர்ந்துகொண்டார்.
"போத்தா சின் மனநிலை ஆரோக்கியமாக உள்ளது" என்று டாக்டர் மகாதேவன் அளித்த சான்றிதழின் அடிப்படையிலேயே போத்தா சின்னுக்கு நீதிமன்ற விசாரணை தொடரப்பட்டு, 1981-இல் கோலாலம்பூர் புடு சிறைச்சாலையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.










