கோலாலம்பூர், செந்தூல், லோரோங் திமூர், லோட் 504, ஜாலான் 5, ஓவ் ஜாலான் செந்தூல் லில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா அக்னி முனீஸ்வரர் ஆலயத்தின் 108 கலசாபிஷேகமும், 21 ஆம் ஆண்டு மஹோத்ஸவ திருவிழாவும் இன்று செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆலயத் தலைவர் அ. குணாளன் தலைமையில் காலை 8 மணிக்கு விக்னேஸ்வர மற்றும் சிறப்பு பூஜைகளுடன் ஆலயத் திருவிழா ஆரம்பமானது.
காலை 9 மணிக்கு பால் குடம் எடுத்தல் நிகழ்வு மிக நேர்த்தியாக, சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு, செந்தூல்,ஆதீஸ்வர சிவன் ஆலயத்திலிருந்து அருள்மிகு ஸ்ரீ மகா அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு நடைப்பயணமாக பால்குடங்களை ஏந்தி வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
தொடர்ந்து மகா அபிஷேகம்,108 கலசாபிஷேகம், விஷேச அலங்கார பூஜை, திருவிழா விஷேச பூஜைகள் நடைபெற்றன.
சிறப்பு பூஜைகளடன் மதியம் மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இரவு 8.00 மணியளவில் காவடிகள் மற்றும் பிற நேர்த்திக் கடன்கள் ஆலயம் வந்தடைந்தது.
முதல் நாளான நேற்று சனிக்க்கிழமை இரவு ஆலய வளாகத்தில் அதிர்ஷ்டக் குலுக்களுடன் கலை இரவு நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ மகா அக்னி முனீஸ்வரர் ஆலயத்தின் இந்த 21 ஆம் ஆண்டு மஹோத்ஸவ திருவிழாவிற்கு பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.








