நாட்டில் 60 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட தேசிய மிருகக்காட்சி சாலையை வேறு இடத்திற்கு மாற்றும் அரசாங்கத்தின் உத்தேசத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர், உலு கிள்ளாளின் வீற்றிருக்கும் தேசிய மிருகக்காட்சி சாலை, அதன் சுற்றியுள்ள தாமான் மெலாவத்தி, கெமென்சா ஆகிய பகுதிகள் துரித வளர்ச்சி கண்டு வருவதால் அந்த விலங்கினப் பூங்கா தொடர்ந்து அவ்விடத்தில் வீற்றிருப்பது பொருத்தமற்றது என்று அரசாங்கம் கருதுவதாக இயற்கை வளம், சுற்றுச்சூழலை, மற்றும் பருவநிலை மாற்றம் மீதான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட் நேற்று தெரிவித்துள்ளார்.
தேசத் தந்தையும், முதலாவது பிரதமருமான Tunku Abdul Rahman அவர்களினால் கடந்த 1963 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட தேசிய மிருகக்காட்சி சாலை, விரிவான ஆய்வுக்கு பின்னரே விலங்கினம் மற்றும் பறவைகளின் சரணாலயத்திற்கு ஏற்ற இடமாக உலுகிள்ளான் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
476 வகையான 5,137 பறவைகள், பாலூட்டிகள், ஊர்வனங்கள் என மிகப்பெரிய விலங்கினப் பூங்காவாக 110 ஏக்கர் நிலத்தில் வீற்றிருக்கும் தேசிய மிருகக்காட்சி சாலையை சிலாங்கூர், டிங்கிலில் உள்ள சதுப்புநிலக்காட்டுப்பகுதிக்கு மாற்றுத் திட்டம், 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டது.
அந்த திட்டத்திற்கு அன்றைய சிலாங்கூர் சுல்தான், மறைந்த Sultan Salahuddin Abdul Aziz Shah கடும் எதிர்ப்பை பதிவு செய்ததைத் தொடர்ந்து தேசிய மிருகக்காட்சி சாலையை டிங்கிலுக்கு மாற்றும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டது என்பது வரலாறாகும்.








