சபா மாநிலம், கோத்தா கினபாலுவிலுள்ள வீடொன்றின் சமையலறையில், மீன் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 37 வயது ஆடவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இது குறித்து கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருடின் மாட் ஹுசைன் கூறுகையில், இச்சம்பவத்தில் அந்த ஆடவரின் கைகள் மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அப்போது அவர் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், அந்த ஆடவர், மீன் பிடிப்பதற்காக வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் வேறு எவருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








